×

நீண்ட இழுபறிக்கு பின்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல் பட்டியல் வௌியீடு: சர்தார்புராவில் முதல்வர் கெலாட், டோங்கில் சச்சின் பைலட் போட்டி

ஜெய்பூர்: ராஜஸ்தான் பேரவை தேர்தலில் போட்டியிடும் 33 பேர் அடங்கிய முதலாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வௌியிட்டது. இதில் தற்போதைய முதல்வர் கெலாட் சர்தார்புரா தொகுதியில் போட்டியிடுகிறார். தெலங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலமான மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நவம்பர் 7ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளது. இதில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் போட்டியிடும் 41 வேட்பாளர்களின் முதலாவது பட்டியலை பாஜ கடந்த 12ம் தேதி வௌியிட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் குறித்து மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தியது. ஆனால் பட்டியல் வெளியாகவில்லை. இழுபறி ஏற்பட்டது. தற்போது திடீரென 33 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வௌியிட்டது. அதன்படி, தற்போதைய முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் களமிறங்குகிறார்.

கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் சட்டப்பேரவை தலைவர் சி.பி.ஜோஷி நாத்துவாரா தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடசரா லாச்மங்கர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் தோல்வியடைந்த டாக்டர். அர்ச்சனா சர்மா மாளவியா நகர் தொகுதியிலும், புஷ்பேந்திர பரத்வாஜ் சங்கனேர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய அமைச்சர்கள் ஹரிஷ் சவுத்ரி பேட்டூ தொகுதியிலும், மம்தா பூபேஷ் சிக்ராய்-தனிதொகுதியிலும் களம் காண்கின்றனர். அமைச்சர் பன்வர் சிங் பதி கோலாய தொகுதி, மகேந்திரசிங் ஜீத் மால்வியா பாகிடோரா தொகுதி, திகரம் ஜுலி ஆல்வார் கிராமம் தொகுதி, அசோக் சந்த்னா ஹிந்தோலி தொகுதி என நிறுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்ட பட்டியலில் 9 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

*பாஜ 2வது பட்டியலில் வசுந்தரா ராஜேவுக்கு இடம்
ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிடும் மேலும் 83 வேட்பாளர்களை பாஜ அறிவித்துள்ளது. இதில் முதல் பட்டியலில் இடம்பெறாத முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. வசுந்தரா ராஜே சிந்தியா அவரது பாரம்பரியமிக்க ஜால்ராபட்டன் தொகுதியில் களம் காண்கிறார். சித்தோர்கரில் நர்பத் சிங் ராஜ்வியும், ஆம்பர் தொகுதியில் மாநில பாஜ முன்னாள் தலைவர் சதீஷ் புனியாவும், நாத்துவாரா தொகுதியில் மகாராண பிரதாப் சிங்கின் வழித்தோன்றலும், அண்மையில் பாஜவில் இணைந்தவருமான விஸ்வராஜ் சிங் மேவார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வசந்தராவின் ஆதரவாளர்கள் பலருக்கும் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

The post நீண்ட இழுபறிக்கு பின்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல் பட்டியல் வௌியீடு: சர்தார்புராவில் முதல்வர் கெலாட், டோங்கில் சச்சின் பைலட் போட்டி appeared first on Dinakaran.

Tags : Rajasthan Congress ,CM Khelat ,Sardarpura, ,Dong ,Jaipur ,Congress ,Rajasthan Assembly ,Sardarpura, Sachin ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை...